கார்த்திக், மணியரசன் - க்ளிக்கில் உறைந்த காலம்

Published on

க்ளிக் என்ற அந்தச் சிறிய ஒலியில் பதிவது உங்கள் புகைப்படம் மட்டுமல்ல காலமும் தான் என்கிறார்கள் ஆர்.மணியரசனும், கார்த்திக் சுப்ரமணியமும். இவர்கள் இணைந்து செய்யும் வேலை சுவாரசியமானது. அந்தக் காலத்துப் போட்டோ ஸ்டூடியோக்களையும் பழைய புகைப்படங்களையும் அப்போதிருந்த புகைப்படக் கலைஞர்களையும் ஆவணப்படுத்த வேண்டி தமிழகம் முழுவதும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த இளம் புகைப்படக் கலைஞர்கள். இருவருமே பொறியியலில் பட்டப்படிப்பும் புகைப்படக்கலையில் மேற்படிப்பும் முடித்தவர்கள்.

கடந்த மூன்றாண்டுகளில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் பயணித்து அங்குள்ள ஸ்டூடியோக்களையும் புகைப்படங்களையும் ஆவணப்படுத்தியுள்ளனர். கம்பீரமாய் அமர்ந்திருக்கும் ஆண்கள்; அமைதியாய் பின்னால் நிற்கும் பெண்கள்; குறும்பாய் சிரிக்கும் குழந்தைகள் என அந்தக்கால கண்ணாடி சட்டகப் புகைப்படங்களைப் பார்க்கும் போது  நினைவலைகள் துள்ளி ஓடுகின்றன. அன்றைய காலத்தில் மக்களின் நினைவுகளைப் பதிவு செய்த பல ஸ்டூடியோக்கள் இன்று காலத்திற்கேற்ப நவீனமாக மாறியுள்ளன. சில அழிந்தும் போய் விட்டன. டிஜிட்டலின் அதிரடி வரவை உள்வாங்க முடியாமல் அந்த ஸ்டூடியோக்கள் மூடப்பட்டுவிட்டன.

முதலில் ஆர். மணியரசன்: “எனது சொந்த ஊர் மதுரை. பி.ஆர்க் முடித்துவிட்டு, பழைமையான கட்டடங்களைப் பாதுகாத்தும் மீண்டும் அதேவடிவில் புதுப்பித்தும் தரும் இன்டாக் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அப்போது பழையக் கட்டடங்களைப் புகைப்படம் எடுத்து வந்தேன். இதனால் புகைப்படக்கலையில் ஆர்வம் ஏற்பட்டு அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைனில் புகைப்படக்கலையில் பட்டமேற்படிப்பு படித்தேன். அங்கே இறுதியில் புராஜெக்ட் வேலையாக அவரவர் ஊரில் இருந்த புகைப்படக்கலை பற்றி ஆய்வு செய்தோம். இதைத் தொடர்ந்து நம்மூரில் அந்தக்காலத்தில் இருந்த புகைப்பட கலைஞர்கள் பற்றியும் அவர்களின் ஸ்டூடியோக்கள் என்ன ஆனது என்பது பற்றியும் ஆய்வு செய்யத் தொடங்கினேன். முதலில் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் மதுரை ஸ்டூடியோவிற்கு நேராக சென்றேன். ஆனால் அது அங்கில்லை. பிறகு ஜூபிடர், சென்ட்ரல் ஸ்டூடியோ, காரைக்குடி வாசன், சுந்தரம் என எல்லா ஊர் ஸ்டூடியோக்களுக்கும் சென்று அங்குள்ளவர்களை சந்தித்து பேசி எனது ஆய்வை முடித்தேன்.”

அடுத்துப் பேசும் கார்த்திக் சுப்ரமணியம், இங்கிலாந்தில் புகைப்பட இதழியலில் மேற்படிப்பு முடித்தவர். “ நான் அந்தக்கால எங்களது குடும்பப் புகைப்படங்களை சேகரித்து கொண்டிருந்தேன். மணியரசன் எனது நண்பர் மூலம் எனக்கு அறிமுகமானார். ஒரே கருத்தால் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தோம். ஒரு ஸ்கேனரைக் கையில் வைத்துக் கொண்டு புகைப்படங்களை பதிவு செய்து வருகிறோம். எங்களது கேமிரா மூலம் அந்த ஸ்டூடியோக்களை ஆவணப்படுத்துகிறோம்.

1950களில் புகைப்படங்களை எடுத்து வந்த சிலரைச் சந்தித்த போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் எங்களுக்குக் கிடைத்தன. அப்போது ஸ்டூடியோக்களில் வந்து புகைப்படம் எடுத்துக் கொள்பவர்கள் சொற்பமே. ஏனெனில் ஆயுள் குறைந்து போய்விடுமாம். இதனால் ஆட்கள் இறந்த பிறகு புகைப்படம் எடுக்கச் சொல்லி கடைக்கு வருவார்களாம். நாடியில் கட்டுடன் கண்களை மூடியபடி இருக்கும் பிணத்தை எடுக்க நமது கலைஞர்கள் படாதபாடுபட்டுள்ளனர். ஒரு நாலணாவை வைத்து கண்களைத் திறந்து, அது மூடும் இரண்டு நொடிகளில் புகைப்படங்களை எடுத்துள்ளனர். அப்படி எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தேடி வருகிறோம்.

காரைக்குடியில் வாசன் என்ற ஸ்டூடியோ இருக்கிறது. 1948ல் சீனிவாசன் என்பவர் ஆரம்பித்துள்ளார். இப்போது அவரது மகன் ரவி அந்த ஸ்டூடியோவை நடத்தி வருகிறார். நாங்கள் அவருடன் நட்பாகி பழைய புகைப்படங்களை அவரது பரணில் இருந்து எடுத்தோம். அவரே வியந்து போகுமளவிற்கு புகைப்படங்கள் இருந்தன. இப்போது ரவியின் மகன் புகைப்படங்களை சேகரிப்பதில் ஆர்வமாகிவிட்டார்” என்கிறார் கார்த்திக்.  “இங்கிலாந்தில் பிரிட்டிஷ்காரர்கள் புகைப்படங்களில் நிறைய பதிவுகளை வைத்துள்ளனர். இந்தியா சம்பந்தமான பதிவு-களும் ஏராளமாக பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ளது. ஆனால் நம்மிடம் இந்தப் பதிவுகள் இல்லை. 1840களில் கேமிரா வந்தவுடனே இந்தியாவிலும் அதன் உபயோகம் வந்துவிட்டது. 1885ல் கும்பகோணத்தில் நல்லாபிள்ளை என்ற ஸ்டூடியோ இருந்துள்ளது. நாங்கள் இன்னும் அங்கே செல்லவில்லை. அது தான் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஸ்டூடியோ.  எங்களது ஒரே நோக்கம் ஸ்டூடியோக்களையும் அந்தக்கால புகைப்படங்களையும் ஆவணப்படுத்த வேண்டும்” என்கின்றனர் இந்த இருவரும் நம்பிக்கை பொங்க.

மார்ச், 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com